
தேர்தல் காலங்களினில் மட்டுமே அரசியல்வாதிகள் எம்மை தேடிவருகின்றனர்.வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயம் பற்றி பேசும் ஆட்கள் எம்மைப்பற்றி ஏதும் கதைக்கமறுக்கிறார்களென குற்றஞ்சாட்டியுள்ளனர் முள்ளிக்குளம் மக்கள்.
அவர்களை சந்திக்க சென்ற வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் மற்றும் விவசாய கால்நடைகள் அமைச்சர் ஆகியோரிடமே சீறிப்பாய்ந்துள்ளனர் மக்கள்.
கடந்த 2010ஆம் ஆண்டு முள்ளிக்குளம் கிராமத்துக்கு மீள்குடியேறச்சென்ற மக்கள் கடற்ப்படையினரால் மீள்குடி ஏற்றப்படாது தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் முள்ளிக்குளம் கிராமத்துக்கு அண்மித்த மலக்காடு என்னும் காட்டுப்பிரதேசத்தில் அம்மக்கள் நான்கு வருடங்களாக தற்;காலிக கொட்டில்களில் வசித்து வருகின்றனர். அங்கு அம்மக்களின் மிக முக்கிய தேவையான தற்காலிக கொட்டில்களை புனரமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டது. அதில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் அங்கு வசிக்கும் மக்களின் நிலைமை கருதி தற்க்காலிக கொட்டில்களை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளார்.
இருந்தும் அங்கிருந்த மக்களின் கோபம் இவர்களின் உறுதி மொழிகளினால் அடங்கவில்லை என்றும் தேர்தல் காலத்தில் 'எல்லாத்தையையும் புடுங்கி எறிவோம்': என்று எங்களுக்கு உசுப்பேற்றிவிட்டு இப்போ அரச சம்பளம் வாங்கியவுடன் வாய் பொத்தி நிற்கின்றீர்களா எனவும் மக்கள் அவர்களுக்கு தெரிவித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐங்கரநேசன், டெனீஸ்வரன் மீது பாய்ந்த முள்ளிக்குளம் மக்கள்
Tag: Srilanka